Saturday, April 09, 2005

Some Traders, A Doctor & An evening game of Chess!

சில வியாபாரிகளும், ஒரு டாக்டரும், ஒரு மாலை நேர சதுரங்க ஆட்டமும்!

சிறுவயது நினைவுகளை அசை போடுவது போல ஓர் இனிமையான சங்கதி (என்னளவில்!) கிடையாது. திருவல்லிக்கேணியில் ஒரு பழைய வீட்டில் வாழ்ந்தபோது நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகள் மற்றும் உடன் வாழ்ந்த மனிதர்கள் குறித்தும் நிறையவே எழுதலாம்! பழைய ஞாபகங்களை அலசி, அவற்றை பதிவு செய்வதற்கு நேரம் ஒதுக்குவது தான் சற்று சிரமமாக உள்ளது.

அந்தக்காலத்தில் வீட்டுக்கு வேண்டிய பல பொருட்கள் (இப்போது போல மளிகைக் கடையிலிருந்தோ சூப்பர் மார்க்கெட்டிலிருந்தோ அல்லாமல்!) வெவ்வேறு வியாபாரிகளிடமிருந்து கிடைக்கப் பெற்றன. 3 மாதங்களுக்கு ஒரு முறை ஒருவர் கிராமத்திலிருந்து புளியை எடுத்து வந்து எங்கள் தெருவில் இருந்த பல வீடுகளுக்கு சப்ளை செய்தார். அதே போல், அரிசி ஒரு நெல்லூர் தெலுங்கரிடமிருந்து வந்தது. பருப்பு வகைகள், எண்ணெய், நெய் என்று ஒவ்வொரு அயிட்டத்தை ஒவ்வொருவர் வீடு தேடி வந்து விற்பனை செய்த காலமது! கல் உப்பை மரத்தள்ளு வண்டியில் வைத்து ஒரு கிழவனார் கூவி கூவி விற்பார்! அதே போல, கோலமாவு, தயிர், பால், பூ, கீரை போன்றவைகளை கூடைகளில் சுமந்து வந்து விற்ற பெண்மணிகளுக்கும் வீட்டுப் பெண்மணிகளுக்கும் இடையே நல்ல அன்னியோன்யம் காணப்பட்டது.

***********************************************

எங்கள் வீட்டுக்கு 2 வீடு தள்ளி டாக்டர் ரங்கராஜன் என்பவர் மருத்துவச் சேவை செய்து வந்தார். அவர் வீட்டின் முன்புறம் கிளினிக்காக மாற்றப்பட்டு, பின்புறம் அவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். வெள்ளை உடை அணிந்து கம்பீரமாகவும் தூய்மையாகவும் காணப்படுவார். அவர் கிளினிக்கின் பிரத்யேக மருந்து வாசனை என் மூக்கின் ஒர் ஓரத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது எனலாம்!!! அவருக்கு ஒர் உதவியாளர் (கம்பவுண்டர்) இருந்தார். எல்லா வகை வலிகளுக்கும் காய்ச்சல்களுக்கும் அந்த கம்பவுண்டர் கலக்கித் தரும் சிவப்பு வண்ண திரவமும், இடித்துத் தரும் வெள்ளைப் பொடியும் தான் சகலகலா நிவாரணி! அவர் தந்த மருந்துகள் பலன் தராவிடினும், அவர் காட்டும் கனிவிலேயே நோயாளிகள் குணம் பெற்று விடுவர்!

ஏழைகளிடம் குறைந்த கட்டணமும் (1 ரூபாய்), பணமிருந்தவர்களிடம் சற்று அதிகமாகவும் வசூலிப்பார். அவரைப் போன்ற டாக்டர்களை இப்போது பார்ப்பது அரிது. Clearly, Medical profession has lost its nobility and making money has become the prime objective, like in any other profession!!! அந்த நல்ல மருத்துவர் வாழ்ந்த வீட்டில் தற்போது ஒரு பள்ளிக்கூடம் இயங்குவதைக் காணும்போது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. அதற்கு நேர்மாறாக, நான் (1 முதல் 5 வகுப்பு வரை) படித்த பள்ளிக்கூடம் இருந்த இடத்தில், தற்போது ஒரு காபிக்கொட்டை கடையும், சூப்பர் மார்க்கெட்டும் இயங்கி வருகின்றன (எல்லாம், நான் அப்பள்ளியில் படித்ததாலோ, என்னவோ?) !! எல்லாமே, "காலம் செய்த கோலமடி!" என பாடத் தோன்றுகிறது.

**********************************************

சிறுவயதில் ஒரு காலகட்டத்தில் செஸ் விளையாட்டின் மீது ஒரு வெறியே இருந்தது. பல புத்தகங்களை படித்ததாலும், சிறந்த செஸ் ஆர்வலர்கள் மத்தியில் இருந்ததாலும், செஸ் ஓரளவு நன்றாகவே ஆடப் பழகி விட்டேன்! எங்களது செஸ் ஆடுவோர் குழுவில், என்னுடன் ஒப்பிடுகையில் மற்றவர் ஜாம்பவான்கள்!!! அவர்களில் முக்கியமானவர்கள், 'சார்' என்றழைக்கப்பட்ட M.Com படிப்பில் தங்க மெடல் வாங்கிய ராகவன் (டோண்டு அல்ல!), கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து வந்த ராஜு (புத்திசாலி, ஆனால் கொஞ்சம் கர்வி!), சென்னைப் பல்கலைக்கழக சேம்பியன் ரமணி மற்றும் சதுரங்க விளையாட்டத்தை உயிர் மூச்சாகவும், பா·பி ·விஷரை ஆதர்ச நாயகனாகவும் பாவித்து வந்த 'செஸ்' வரதராஜன் ஆகியோர். தினமும் மாலை நேரங்களில் பள்ளி விட்டு வந்தவுடன் சார் வீட்டுத் திண்ணையில் செஸ் ஆட்டங்கள் நடைபெறும். எல்லாமே செஸ் விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற சீரியஸான ஆட்டங்கள்! அதோடு உலகின் சிறந்த ஆட்டக்காரர்களின் ஆட்டங்கள் பற்றிய விவாதங்களும் உண்டு. அப்போது தான், என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றது!!!

அந்த கார்கால மாலைப் பொழுதில் வானம் இருண்டு, லேசான தூறலுடன் மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. வழக்கம் போல நாங்கள் (ஒருவருடன் ஒருவர்) செஸ் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வீதியில் குப்பை பொறுக்கும் ஒரு தாடி இளைஞர், தோளில் கோணியோடு, வாசலில் நின்றபடி சன்னல் கம்பி வழியாக நாங்கள் ஆடுவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். சார் அவரைப் பார்த்து, "செஸ் ரொம்பப் பிடிக்குமா? விளையாடத் தெரியுமா?" என ஒரு பேச்சுக்கு கேட்டார். அவ்விளைஞர், " சுமார ஆடுவேங்க! என்னையும் சேத்துப்பீங்களா?" என்று பணிவாகக் கேட்டார். சார் என்ன நினைத்தாரோ, அவ்விளைஞரைப் பார்த்து, "கோணியை ஒரமாக வைத்து விட்டு இங்கு வந்து இவரோடு ஒரு ஆட்டம் ஆடலாம், வா!" என்று ராஜுவை சுட்டிக் காட்டி கூறினார்.

ராஜு, "நான் ஆடத்தான் வேண்டுமா?" என்று அயற்சியாக வினவ, சார், "பாவம், ஆசைப்படறான்! ஒரு வாய்ப்பு தரலாம் அல்லவா?" என்று குழுவின் தலைவர் என்ற முறையில் தனது முடிவை சொன்னவுடன் ஆட்டம் தொடங்கியது! முதலில் கேஷ¤வலாகவும், வேகமாகவும் ஆட ஆரம்பித்த ராஜு பத்து நகர்த்தல்களுக்கு (MOVES) பிறகு, எதிராளியின் (Ruy Lopez opening-க்கு எதிரான) பதில் மூவ்களைக் கண்டவுடன், முதலில் கொஞ்சம் பின்னர் அதிகம் யோசிக்கவும் தொடங்கினார்.


செஸ் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தூறல் வலுத்து, இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது! ராஜு 2 யானைகளை இழந்து தாடியின் ராணியை வீழ்த்தியிருந்தார். தாடி அசரவில்லை! இருவருமே அடுத்தவரின் பாதுகாப்பு அரணை உடைக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு ராஜுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. வெற்றி பெற வேண்டும் என்பதை விட டிரா செய்ய வேண்டுமே என ராஜு பிரயத்தனப்படுவதை உணர முடிந்தது. குப்பை இளைஞரின் முகத்திலோ எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை!! இந்த வினோதமான விளையாட்டைக் காண கூட்டம் வரத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில், ராஜு, "யாரும் ஜெயிக்க வாய்ப்பில்லை! டிரா என்று வைத்துக் கொள்வோம்" என்றதற்கு அவ்விளைஞர், "இல்லீங்க! இன்னும் ஆட்டம் பாக்கி இருக்குதுங்க!" என்றார். கடுப்பான ராஜு ஆட்டக்களத்தில், ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கினார். இப்போது வானம் மடை திறந்தது போல, பேரிரைச்சலுடன் மழை பெய்து கொண்டிருந்தது! அதைத் திறமையாக சமாளித்த தாடி இளைஞர், தன் ராஜாவை பத்திரப்படுத்தி விட்டு, ராஜுவின் ராஜாவை சந்திக்கு இழுத்து, ஒரு தேர்ந்த விற்பன்னரின் லாவகத்துடன் காய்களை நகர்த்தி (ராஜு அந்த ஆளுக்கு எதிராக 'ரிஸைன்' செய்வதை அவமானமாக எண்ணியதாலும், எப்படியாவது PERPETUAL CHECK வழியிலாவது தப்பித்து விடலாம் என்று நினைத்ததாலும்!) ஒரு கட்டத்தில், "செக் மேட் (check mate!), ஆனால் நீங்க ரொம்ப நல்லா ஆடறீங்கய்யா! நன்றிங்க!" என்று கூறி விட்டு, தன் கோணிப்பையை எடுத்துக் கொண்டு திரும்பி பார்க்காமல், விடுவிடுவென்று நடந்து சென்று விட்டார்!!! அதே நேரம் மழையும் நின்று, தெருவில் மழை நீர் வெள்ளமாக திரண்டிருந்தது. அவ்விடத்தில ஒரு அபரிமிதமான அமைதியும் நிலவியது!!!

நடந்த சம்பவத்தின் அபாரத் தன்மையையும், அசாதாரணத்தையும் உணர அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் சிறிது நேரம் பிடித்தது. அன்றிலிருந்து செஸ் விளையாட ராஜு வரவில்லை!!! அன்று இன்னொரு வேடிக்கையும் நிகழ்ந்தது! ராஜு தோற்றதை பார்த்து அதிர்ச்சியில் இருந்த சேம்பியன் ரமணியை முதல் தடவையாக நான் (மிகவும் கஷ்டப்பட்டு தான்!) தோற்கடித்தேன்! அந்த தாடிக்கார அறிவாளியை அந்த சம்பவத்திற்குப் பின் நாங்கள் சந்திக்கவில்லை! ஆனால் அவரது அமைதியை தேக்கிய முகம் இன்றும் பளிங்கு போல் என் ஞாபகத்தில் உள்ளது!!!!!


என்றென்றும் அன்புடன்
பாலா

4 மறுமொழிகள்:

பாலு மணிமாறன் said...

செஸ் பற்றிய பதிவு அற்புதம் பாலாஜி... பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்திய செஸ்ஸை கவனித்து வருகிறேன்... செஸ் சார்ந்து இப்படி ஒரு சுவாரஸ்யமான பதிவை படிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி. அப்புறம்..அந்த குப்பை இளைஞனின் கோணிப்பைக்குள் பார்த்தீர்களா - ராஜீவின் கர்வம் இருந்ததா என்று? : ))

said...

Thanks Balu for your Kind appreciation and comments

enRenRum anbudan
BALA

Unknown said...

Want more clicks to your Adsense Ads on your Blog?

Then you have to check out my blog. I have found a FREE and Legitimate way that will increase your earnings.

Come Check us out. How to Boost Your AdSense Revenue

said...

சதுரங்கம் விளையாட்டை அவர்கள் இருவரும் விளையாண்ட விதத்தை தாங்கள் விவரித்த விதம் மிகவும் அருமை, கண்முன்னே காட்சியென விரிந்தது...

அப்படி விளையாடியவரிடம், ஒருவரும் வேறு எதுவுமே பேசவில்லையா ???!!!!

கஷ்டமாவே இருக்கு..!!!!

-
செந்தில்/Senthil

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails